Gita Dhyana Shlokam

கீதா த்யான ஸ்லோகம்

(ஸ்ரீமத் பகவத்கீதையின் சிறப்பையும், ஸ்ரீமந்நாராயணனின் மகிமையையும் விளக்கும் இந்த ஸ்லோகங்கள் மிகுந்த சொற்சுவையும், பொருட்சுவையும், அழகிய உருவகங்களும் கொண்டவை)

 

1.    ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं

व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् ।

अद्वैतामृतवर्षिणीं भगवतीम्- अष्टादशाध्यायिनीम्

अम्ब त्वामनुसन्दधामि भगवद्- गीते भवद्वेषिणीम् ॥ १॥

 

பகவான் நாராயணானால் பார்த்தனுக்கு போதிக்கப்பட்டவளும், மஹாபாரதத்தின் மத்தியில்  பழம்பெரும் முனிவரான வியாஸரால் எழுதி அமைக்கப்பட்டவளும், அத்வைதம் என்னும் அம்ருதத்தைப் பொழிபவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், பிறவிப்பற்றை நீக்கச்செய்பவளுமான பகவத் கீதை என்னும் தாயே!  உன்னையே த்யானிக்கிறேன்.

 

2.    नमोऽस्तु ते व्यास विशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र ।

येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः ॥ २॥

 

விசாலமான அறிவாற்றல் உள்ளவரும், மலர்ந்த தாமரையின் இதழ் போன்ற கண்களை உடையவரும், மஹா பாரதம் என்னும் விளக்கை, ஞானமாகிய எண்ணெய் ஊற்றி, ஒளிரச் செய்தவரும் ஆன வியாசரே! உமக்கு நமஸ்காரம்!

 

3 प्रपन्नपारिजाताय तोत्रवेत्रैकपाणये ।

ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः ॥ ३॥

 

சரணடைந்தவர்களுக்கு கற்பகம் போல் கேட்டதனைத்தையும் தருபவரும், ஒரு கையில் கம்பையும் சாட்டையையும் பிடித்திருப்பவரும், ஞானமுத்திரையில் இருப்பவரும், கீதை என்னும் அமுதத்தைக் கறந்து கொடுத்தவரும் ஆன ஸ்ரீ க்ருஷ்ணருக்கு நமஸ்காரம்!

 

4 सर्वोपनिषदो गावो दोग्धा गोपाल नन्दनः ।

पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् ॥ ४॥

 

அனைத்து உப நிஷதங்கள் என்னும் பசுக்களிடமிருந்து, பார்த்தன் என்னும் கன்றுக்குட்டியின் நிமித்தம், கோபால நந்தனனான ஸ்ரீ க்ருஷ்ணன் கறந்தளித்த மகத்தான கீதை என்னும் அமுதத்தை , தூய்மையும், ஞானமும் உள்ளவர்கள் பருகுகிறார்கள்.

 

5 वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् ।

देवकीपरमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ५॥

 

வசுதேவரின் மைந்தனும், கம்சன், சாணூரன் போன்ற அசுரர்களை அழித்தனும், தேவகிக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பவனும், இந்த உலகுக்கே குருவானவனும் ஆகிய ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு நமஸ்காரம்!

 

6 भीष्मद्रोणतटा जयद्रथजला गान्धारनीलोत्पला

शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला ।

अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी

सोत्तीर्णा खलु पाण्डवै रणनदी कैवर्तकः केशवः ॥ ६॥

 

பீஷ்மரும், த்ரோணரும் இரு கரைகளாக, ஜயத்ரதன் நீராக, காந்தர்வ தேசத்தரசனான சகுனி நீலத்தாமரையாக, சல்யன் சுறாமீனாக, க்ருபர் அலையாக, கர்ணன் பேரலையாக, அஸ்வத்தாமன், விகர்ணன், முதலானோர் பயங்கரமான முதலைகளாக, துர்யோதனன் அதில் உள்ள சுழலாக அமைந்திருந்த, போர் என்னும் நதியை, பாண்டவர்கள் க்ருஷ்ணன் என்ற படகோட்டியின் உதவியுடன், கடந்தார்கள்.

 

7 पाराशर्यवचः सरोजममलं गीतार्थगन्धोत्कटं

नानाख्यानककेसरं हरिकथा- सम्बोधनाबोधितम् ।

लोके सज्जनषट्पदैरहरहः पेपीयमानं मुदा

भूयाद्भारतपङ्कजं कलिमल- प्रध्वंसिनः श्रेयसे ॥ ७॥

 

பராசரரின் புதல்வராகிய வியாசரின் வாக்கு என்னும் ஏரியில் உதித்த தாமரையாகிய இந்த மஹாபாரதம், பகவத்கீதையின் நறுமணத்துடனும், தனக்குள் உள்ள கதைகளாகிய மகரந்தத்துடனும், ஸ்ரீஹரியைப் பற்றிய உபன்னியாசங்களால் முழுமையாக மலர்ந்து, கலியுகத்தின் மோசமான விளைவுகளைக் களையும் ஆற்றல் மிகுந்ததாய், நல்லோர்கள் என்னும் வண்டுகளால், ஆனந்தமாகப்பருகப் பட்டு, அனைவருக்கும் நலம் பயக்கட்டும்!.

 

8 मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम् ।

यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम् ॥ ८॥

 

எவருடைய கருணையால், பேசமுடியாதவன் அருமையான பேச்சாற்றல் பெறுகிறானோ, நடக்க முடியாதவன் மலையைத் தாண்டுகிறானோ, அந்தப் பரமானந்தம் கொடுக்கும் மாதவனை வந்தனை செய்கிறேன்.

 

9 यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैः स्तवैः

वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ।

ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः

यस्यान्तं न विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः ॥ ९॥

 

திவ்யமான ஸ்தோத்திரங்களால் பிரம்மா, வருணன், இந்திரன், ருத்திரன், மருதன் ஆகியோரால் வணங்கப்படுபவனும், சாம வேத விற்பன்னர்கள் நல்ல முறையில் வேதங்களையும், உபநிஷதங்களையும் பாடுவதைக் கேட்டு மகிழ்கின்றவனும், தங்கள் மனத்தை முழுமையாக இறைவனில் செலுத்திய  யோகிகளால் தன்னுள்ளேயே தரிசிக்கப்படுகின்றவனும், இவனுடைய முடிவு எங்கே என்பதை தேவர்களும், அசுரர்களும் கூடக் காணமுடியாதவனுமான, மகத்தான அந்தத் தேவனுக்கு நமஸ்காரம்!

சுபம்

Comments